ஷேர் மார்க்கெட் என்னும் பங்குச்சந்தைகளில் ஈடுபடுகிறவர்களில் முழுவதும் வென்றவர்களும் கிடையாது, தோற்றவர்களும் கிடையாது. ஆனால், அந்தப் படிப்பினைகளைக் கொண்டு புதிய முயற்சிகளில் ஈடுபட்டு தங்களை வளப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். லாபம் வரும்போது மகிழ்வதும், இழப்பு நேரும்போது துவண்டுவிடுவதும் கூடாது. பங்குச்சந்தையில் நுழைய நிபுணத்துவம் தேவைதான். அறிவார்ந்து அலசும் தன்மை கொஞ்சம் இருந்தால் போதும். அதை நான் விளக்கமாகவே தந்திருக்கிறேன். அந்தச் சந்தையில் எப்போது நுழையவேண்டும், எப்போது வெளியேறிவிடவேண்டும் என்கிற தந்திரம் தெரிதல் அவசியம். பேராசை கட்டாயம் இருக்கக்கூடாது. கார் ஓட்டுனருக்கு அதன் எஞ்சின் எப்படி வேலை செய்கிறது என்ற அறிவு அவசியம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சாலை விதிகள் அனைத்தும் தெரிந்திருக்கவேண்டும். நடுவழியில் பஞ்சர் ஆகிப்போனால் ஸ்டெப்னியை மாட்டத் தெரிந்திருக்கவேண்டும். அப்போதுதான் தடையின்றிப் பயணத்தை மேற்கொள்ள முடியும். அதுபோல சந்தை விதிகளைப் புரிந்துகொள்ளுதல் நலம் பயக்கும். டெக்னிகலாக அலசும் ஒருசில சந்தை வார்த்தைகளைத் தெரிந்துகொண்டு, பங்குகள் வாங்குதல், விற்றல் போன்றவற்றை சார்ட்டுகள் (Chart Reading) மூலமாக ஆராய்ந்து, பாதுகாப்புடன் ஈடுபட வைப்பதுதான் இந்நூலின் நோக்கம். “நான் பெற்ற பயிற்சி பெறுக இவ்வையகம்” என்ற குறிக்கோளில் ஆங்காங்கே என் அனுபவக் குறிப்புகளைத் தந்திருக்கிறேன்.
நீங்கள் பங்கு வர்த்தகம் செய்து வெற்றி பெற வாழ்த்துகள்!